திங்கள், 1 ஜூன், 2015

மாணவர்களும் மாநகர பேருந்தும்

கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து வழித்தட பேருந்துகளும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிதுங்கி வழியும் அளவுக்கு பயணிகளை ஏற்றி செல்கிறது. படிக்கட்டில் பயணிக்கும் பெரும்பாலானோர் 'வேறுவழி' இல்லாத காரணத்தாலும், செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய காரணத்தாலுமே இவ்வாறு பயணம் செய்ய வேண்டியதாகிறது. பெரும்பாலான இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கினாலும், பெருகிவரும் மாநகர மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை.

மாநகர போக்குவரத்துக் கழகத்தால் போதுமான பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றால், தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கலாமே!

போதுமான பொது போக்குவரத்து இருந்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும்.

பேருந்துகள், பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் இறங்க மற்றும் ஏற தேவையான கால அவகாசத்துடன் நிற்க வேண்டும். பெரும்பாலான பேருந்துகள் பயணிகள் இறங்க போதுமான நேரம் தருவதில்லை. இதனால் பயணிகள் படிக்கட்டு அருகே நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டியதாகிறது. பேருந்துக்கு மத்தியில் இருக்கும் பயணிகள் படும் பாடு இருக்கிறதே... கேக்கவே வேண்டாம். இதில் சீக்கிரம் இறங்கசொல்லி நடத்துனரின் வசைச்சொல் வேறு.

இதுபோன்ற பயணிகளுக்கான சட்டங்கள் அனைத்தும் குளுகுளு அறையிலும், அரசு வாகனத்திலும் பயணிக்கும் அதிகாரிகள் முடிவு செய்வது காலக்கொடுமை. ஒவ்வொரு MTC பணிமனையிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 'ஓபன் ஹவுஸ்' எனப்படும் போக்குவரத்து உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்கிற விதிமுறைகளை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

பயணிக்கும் பேருந்தின் தன்மையை, பாதுகாப்பை, பயணிகளை விட வேறு யார் சிறப்பாக சொல்ல முடியும்.

இங்கே மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் போலீஸ் அதிகாரிகள், நிறுத்தங்களில் நிற்காமல், நிறுத்தத்தை விட்டு தள்ளி நிறுத்தும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் மீது 'ஆன் தி ஸ்பாட்' நடவடிக்கை எடுப்பார்களா?

நிர்வாக சீர்கேடுகளையும், மக்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனபோக்கையும், அடுத்தவர்களை குற்றம் சாட்டும் போக்கும் இந்த விபத்து தோலுரித்து காட்டிவிட்டது. சமுதாயத்தின் அனைத்து சீர்கேடுகளையும் சீர்தூக்கி பார்த்து, அதை சரிசெய்வதை விட்டுவிட்டு, அங்கங்கே பிரச்சனைகள் வரும்போது மட்டும் அதை அடைக்க பஞ்சர் போடும் வேலையை அதிகாரிகள் இனிமேலும் செய்யாமலிருக்க வேண்டுகிறேன். அதுவே எதிர்கால வாழ்கையின் பாதுகாப்புக்கு ஒரு அஸ்திவாரம்.

உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தையும் எதிர்காலத்தையும் விட்டு செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்காக சேர்த்து வைக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களை விட்டு கரையக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக